டிசம்பர் 4 - இந்திய தேசிய கடற்படை தினம்:
உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகத் திகழும் இந்தியா,
மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடாகிய இந்தியாவின் எல்லைக்கோடு பெரும்பாலும் கடற்கரையைக் கொண்டுதான் உள்ளது. இந்தியக் கடற்கரையின் நீளம் 7,517கி.மீ. என்பதால் இந்நாட்டுக்குக் கடலோர பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும்.
இந்தியக் கடற்படை 1947ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்தியக் கடற்படையில் அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர்.
1971ம் ஆண்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சிமீது இந்தியக் கடற்படை தாக்குதலை நடத்தியது. ஆப்ரேஷன் டிரைடன்ட் என்ற பெயரில் டிசம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் போரில் இந்தியக் கடற்படை சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றது.
இதனை நினைவுபடுத்தும் விதமாக, இந்திய கடற்படை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மும்பை, விசாகபட்டிணம், கொச்சி, போர்ட் பிளேர் என 4 மண்டலங்களாக கடற்படை செயல்படுகிறது.
இந்தியக் கடல் எல்லைகளைக் கண்காணித்து, எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்தல். கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்து, கடல் வணிகம் சிறப்பாக நடைபெற உதவுதல். இராணுவத்தின் மற்ற பிரிவுகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதிப் பணிகளில் ஈடுபடுதல். பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுதல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது இந்தியக் கடற்படை.