டிசம்பர் 22- தேசிய கணித தினம்:
டிசம்பர் 22- தேசிய கணித தினம்:
உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம்.
இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.
ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.
யார் இவர்?:
ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச, 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.
ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார்.
அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான்.
12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.
அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.
இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார்.
ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.