மாடுகளை தாக்கும் அம்மை நோய்
மாடுகளை தாக்கும் அம்மை நோய் வேகமாக பரவி வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து கால்நடைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில், பசுமாடுகள் மற்றும் எருமை மாடுகளை அம்மை இனத்தை சார்ந்த வைரசால் ஏற்படும் தோல் நோய் தாக்கி வருகிறது. கலப்பின மாடுகளை அதிகம் பாதிப்புகுள்ளாக்கும் இந்நோய், கொசுக்கள், ஈக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவுகிறது.நோய் பாதித்த மாடுகளுக்கு ஜூரம், சளி, மூச்சு விடுதலில் சிரமம், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குறைதல், தோல்களில் வட்ட வடிவில் தடித்த முடிச்சுகள் காணப்படுதல், தாடைகள், கழுத்து மற்றும் முன் கால்களுக்கு இடையில் வீக்கம் காணப்படுதல், மாடுகள் நடக்க இயலாதிருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.வைரஸ் தாக்கத்தால் நோய் ஏற்படுவதால் தடுப்பூசிகள், சிறப்பு சிகிச்சைகள் இல்லை.
நோயிலிருந்து மாடுகளை பாதுகாக்க விவசாயிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொசுக்கள், ஈக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவுதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மாட்டு கொட்டைகையில் புகை மூட்டம் போட வேண்டும், மாடுகளில் இருக்கும் உண்ணிகளை அகற்றி, மாட்டுக் கொட்டகைகள் மற்றும் மாடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.நோய் பாதித்த கால்நடைகளை தனிமைபடுத்த வேண்டும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் கால்நடை மருந்தகங்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நோய் தீவிரத்தை குறைக்க மாடு ஒன்றுக்கு 10 கிராம் கருப்பு மிளகு 50 கிராம் வெல்லம், 10 கிராம் உப்புஆகியவற்றை துாளாக்கி 10 வெற்றிலையில் வைத்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீதம் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.